தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த ஆனைமுத்து தன் இயக்கத்தை சமீபத்தில் நிறுத்திக் கொண்டார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இயக்கப்பணிகளில் நெருங்கிப் பழகிய என்னைப் போன்றோருக்கு அது சொல்லொணா இழப்பு.
பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி என்ற ஊரில் பிறந்தவர். ஊரில் ஒரு முறை ஆற்றில் குளித்துவிட்டு வருகையில் ஏடி பன்னீர் செல்வம் என்கிற திராவிட இயக்கத்தலைவர் விமானவிபத்தில் இறந்த செய்தி கிடைத்து தன்னுடன் படித்த பிராமணத் தோழன் குதூகலித்ததைப் பார்த்து அதன் பின்னணியை ஆராயத் தொடங்கியதாகக் குறிப்பிடுவார். அதன் பின்னரே அவர் பெரியார் பக்கம் ஈர்க்கப்படுகிறார். அத்துடன் வன்னியர் சங்கப் பணிகளிலும் இளமையில் ஈடுபட்டார். ராமசாமி படையாச்சியாரின் உழைப்பாளர் கட்சியின் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டினார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட் படித்தபோது முதல் ஆண்டில் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என ஆனைமுத்து நினைக்க, ஆங்கிலத்தில் முதலாவதாக வந்த மாணவனாயிற்றே என பல்கலைக்கழகமே அவரை இரண்டாவது ஆண்டு படிக்க அனுமதித்தது. ஆனாலும் ஆனைமுத்துவின் ஆர்வம் சமூகத்தொண்டின்பால் திரும்பிவிட்டது. 1952 முதல் 56 வரை தென்னாற்காடு மாவட்ட மணிலா மார்க்கெட் கமிட்டி என்கிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எழுத்தராகவும் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து பதவியைத் துறந்தார். 1956-க்குப் பின்னாக முழுக்க திராவிடக் கழகத்தில் செயல்பட்டார்.
அறுபதுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா வரும்போது மாட்டு வண்டி கட்டிக்கொண்டு அதில் ஒலிபெருக்கியுடன் ஒரு மாதம் முழுக்க ஊர் ஊராகச் செல்வார். எல்லா ஊரிலும் கூட்டம் உண்டு. அரிசி பருப்பு போன்றவற்றை எடுத்துச் சென்று கூட்டம் போடும் ஊரில் இருக்கும் ஏழைத் தாய்மார் வீட்டில் கொடுத்து சமைத்துத் தரச்சொல்லி சாப்பிடுவார்கள்.
தந்தை பெரியாரை ஒரு கட்டத்தில் எல்லோரும் வழிபாட்டுக்குரிய தலைவராகக் காண ஆரம்பித்த காலகட்டத்தில் அவருடன் விவாதம் செய்துகொண்டிருந்தவர் ஆனைமுத்து மட்டுமே. பெரியார் இந்துக்கள் என்று நம்மை அழைத்துக்கொள்ளாமல் பகுத்தறிவாளர், நாத்திகர் என்று போட்டுக்கொள்ள வேண்டும் எனக்கூறினார். ஆனால் அவரை சந்தித்த ஆனைமுத்து அப்படி போட்டுக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. நமது சட்டங்கள் அதை எப்போதும் அனுமதிக்காது என வாதிட்டார். பெரியார் இந்த கருத்தை பல வழக்கறிஞர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தி ஆனைமுத்து சொல்வதே சரி என்று ஏற்றுக்கொண்டார்.
எழுபதுகள் வரையில் பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் சிறுசிறு நூல்களாக மட்டுமே இருந்தன. பெரியாரை அறிந்துகொள்வதற்கு தொகுப்பு நூல் எதுவும் அதுவரை இல்லை. பல்வேறு இதழ்களில் இருந்த அவரது எழுத்துகள் தேடி எடுக்கவேண்டிய நிலையில் இருந்தன. இந்நிலையில் பெரியாரின் எழுத்தையும் பேச்சையும் நூலாக்க ஆனைமுத்து விரும்பினார். எனவே அவரது அனுமதியுடன் அவற்றைத் தொகுக்க முனைந்தார். குடியரசு, விடுதலை என பல இதழ்களில் இருந்தவற்றை தலைப்பு வாரியாகப் பிரித்து திருச்சியில் இருந்த பெரியார் அவர்களிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றார். பெரியாரின் முதல் துணைவியார் நாகம்மை மரணம் அடைந்தபோது அவர் விடுத்த இரங்கல் செய்தி எவ்வளவு உருக்கமானது என்பதை அனைவரும் அறிவர். அந்த செய்திக்கட்டுரையை பெரியாரிடம் ஆனைமுத்து வாசித்துக் காட்டியபோது இரண்டு வரிகளைக் கேட்டபின் முழு கட்டுரையையும் அப்படியே பெரியார் கலங்கிய கண்களுடன் ஒப்பித்திருக்கிறார்!
ஆனைமுத்துவுக்கு ஏழு மகவுகள். ஐவர் உயிர் வாழ்கின்றனர். பெற்ற பிள்ளைகளுக்குப் பெயர் கூட ஆனைமுத்து வைத்தது இல்லை! எல்லாம் அவரது துணைவியாரே பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு, ஆனைமுத்து மாநிலம் முழுக்க பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப ஓயாமல் நடையாய் நடந்தார். எந்த பகுதியாக இருந்தாலும் பேருந்திலேயே போய்விடுவார். கையில் இரண்டு பெரிய புத்தகப் பைகளை வைத்திருப்பார். யார் கேட்டாலும் தராமல் அவரே சுமந்து வருவார்.
பணம் இல்லையே என்பதற்காக எந்த செயலையும் செய்வதில் சுணங்கமாட்டார். எதையும் முடிக்க வேண்டும் என்று நினைத்தால் எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே விடுவார். எவ்வளவு பெரிய முரடனாக இருந்தாலும் எதிர்த்து நிற்க அவர் தயங்க மாட்டார். பொதுவாழ்வில் அவர் தாக்குதல்களை எதிர்த்தாக்குதல்களால் முறியடித்த காலகட்டமும் கத்தியை பாதுகாப்புக்கு வைத்திருந்த காலமும் உண்டு.
பெரியாரின் எழுத்துகளை தொகுத்ததன் மூலம் பெரியாரியலில் மேலும் செழுமை பெற்றார். ஏற்கெனவே அவர் தமிழ் இலக்கியங்களை ஆழக் கற்றவர். தொல்காப்பியத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். இந்திய அரசியல் சட்டத்தை நாமெல்லாம் துப்பறியும் நாவலைப் படிப்பதைப் போல் ஆர்வமுடன் படிப்பார். உலக நாடுகளின் அரசியல் சட்டங்களையும் படித்திருந்தார். அரசியல் சாசன அவையில் அம்பேத்கர் தலைமையிலான குழு நமது அரசியல் சாசனத்தை உருவாக்கி சமர்ப்பிக்கும் முன்பாக நாடாளுமன்ற செயலராக இருந்த பி.என்.ராவ் என்ற அதிகாரி மாதிரி அரசியல் சாசனம் ஒன்றைத் தயாரித்திருந்தார். இதையொட்டித்தான் இந்திய அரசியல் சட்டமே தயாரிக்கப்பட்டது. புதுடெல்லியில் தேசிய ஆவணக்காப்பகத்தில் இருந்து பி.என்.ராவ் எழுதிய சட்டத்தை நகலெடுத்து வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சென்னை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சியினர் டெல்லி ஆங்கில அரசிடம் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்களையெல்லாம் அங்கிருந்து நகலெடுத்து வைத்திருந்தார். ஆய்வாளர் ஆ.இரா வேங்கடாசலபதி தேசிய ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களைத் தேடி எடுத்தவர். அவரிடம் பேசுகையில்,'' நான் எந்த ஆவணங்களைத் தேடி எடுத் தாலும் எனக்கு முன்பாக அவற்றைப் படித்தவர்கள் பட்டியலில் ஆனைமுத்துவின் பெயரையும் பார்த்திருக்கிறேன்'' என்று வியந்து கூறினார்.
பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்தது ஆனைமுத்துவின் ஒரு முதன்மையான பங்களிப்பு என்றால் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக தனி ஒருவராகப் போராடியது இன்னொரு முக்கிய பங்களிப்பு.
காகா கல்லேல்கர் தலைமையில் நேரு முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். 1955&இல் அதன் அறிக்கை அவரிடம் அளிக்கப்பட்டது. அதை அவர் அமல் படுத்தவில்லை. இது இந்தியா முழுக்க இருக்கும் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பு இருந்து மத்திய அரசு செய்யாதிருக்கிறது என்பதை உணர்ந்த ஆனைமுத்து 1978&இல் எந்த பின்புலமும் இல்லாத சாதாரணராக மூன்று தோழர்களை மட்டும் கூட்டிக் கொண்டு டெல்லிக்கு சென்றார். அங்கே குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரை இதற்காக சந்தித்தார். பீகார் மக்களவை உறுப்பினர் ராம்அவதேஷ் சிங்கின் நட்பு கிடைக்க, அவருடன் இணைந்து வட இந்தியாவில் இதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிப் பாடுபட்டார். அப்போதைய பிரதமர் மொரார்ஜி. 1977&இல் ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் காகா கல்லேல்கர் அறிக்கையை அமல் படுத்துவோம் என குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாயை நேரில் சந்தித்த ஆனைமுத்து, சேலம் சித்தையன், ராம் அவதேஷ் சிங் ஆகியோர் இந்த ஆணைய பரிந்துரைகளை அமல் படுத்தக் கோரினர். மொரார்ஜி தேசாயோ ஓர் ஆணையத்துக்குப் பத்தாண்டுகள்தான் காலம் உண்டு என்று புறம் தள்ள முயன்றார். 55இல் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் 78&இல் காலாவதி ஆகிவிட்டன என்று அவர் சொல்ல அப்படியெனில் ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டீர்கள் என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து பிபி மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1979&இல் உருவாக்கப்பட்டது! இந்த ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே மண்டலை ஆனைமுத்து சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி இருந்தார்!
1980 -இல் இந்த ஆணையம் அறிக்கை கொடுத் தாலும் பின் வந்த காங்கிரஸ் அரசுகள் அதை கிடப்பில் போட்டன. 1990&இல் பிரதமர் வி.பி.சிங் மண்டல் ஆணையப் பரிந்துரைகள் படி பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த ஆணை பிறப்பித்தார். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆனைமுத்து தன் நேரத்தை வட இந்தியாவில் இதற்கான அழுத்தம் கொடுக்கும் பணிகளிலேயே செலவிட்டுக்கொண்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல்! தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு இருந்தது 50 விழுக்காடாக எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் உயர்த்தப் படுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ஆனைமுத்து!
கட்சிப்பணி மற்றும் சிந்தனையாளன் இதழுக்காக பல இரவுகள் அவருடன் அலுவலகத்தில் தங்கிப் பணி புரிந்துள்ளேன். விடிகாலை இரண்டு மணி முதல் காலை ஏழு மணி வரை கட்டுரைகள் எழுதுவார். பிறகு அவற்றை உரக்கப் படிப்பார்! ‘காதும் கேட்கவேண்டும் தோழர். அப்போதுதான் அதில் தவறுகள் இருந்தால் தெரியும்!'' என்பார். திட்டமிட்டு இயக்க மாநாடுகள் பல நாட்கள் நடத்துவார்! மாநாடு முடிந்ததும் சில நாட்கள் ஓய்வெடுக்கலாம் என நினைக்கமாட்டார். மறுநாள் காலையே வேறு பணியை திட்டமிட்டு வைத்திருப்பார்! கிளம்பிப் போய்விடுவார்! சமூகத் தொண்டையே முழு நேரப்பணியாக வைத்திருந்த அவருக்கு இயற்கையால் மட்டுமே ஓய்வைத் தர முடிந்துள்ளது!
(க.முகிலன், அம்பேத்கரிய,பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர்.நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)
மே 2021